தமிழ் மக்களின் விடுதலைக்காக எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அஹிம்சை வழியில் போராடிய மாபெரும் தலைவர் தந்தை செல்வா

தமிழ் மக்களின் விடுதலைக்காக எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அஹிம்சை வழியில் போராடிய மாபெரும் தலைவர் தந்தை செல்வா அவர்கள் அன்னார் தமிழ் மக்களுக்கு மட்டும் உரித்தானவர் அல்ல. இந்த நாட்டுக்கு உரித்தான மாபெரும் சொத்து. அஹிம்சை வழியில் தனது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்தமை காரணமாக இவரை ஈழத்து காந்தி என்று யாவரும் மரியாதையோடும் அன்போடும் அழைப்பர்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

திருக்கோயில் பிரதேசத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் ஞாபகார்த்த நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் மேலும் பேசுகையில்,

சட்டத் துறையில் நிறைந்த அறிவும் அனுபவமும் மிக்க பெருந் தலைவர். இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களை ஒரே குடையின் கீழ் வைத்து இன, மத, குல வேறுபாடுகளைக் கடந்து சேவையாற்றிய பெருந்தகை. தந்தை செல்வா  காட்டிச் சென்ற அஹிம்சை வழிப் போராட்டத்தை இன்று எமது இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையில் வாழும் பெரும்பான்மை சமூகம் அனுபவிக்கின்ற அனைத்து சலுகைகளையும், உரிமைகளையும் சிறுபான்மை சமூகங்களும் அனுபவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அஹிம்சை வழிப் போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்தான் தந்தை செல்வா. அன்னார் காட்டிய அரசியல் வழிமுறையை தொடர்ந்தும் பின்பற்றி எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது எமது தலையாய பணியாகும் என்றார்.