இது அரசியல் செயற்பாட்டின் நீட்சியல்ல: நடந்ததென்ன?
வாக்களித்த மக்களுக்கு விளக்கமளித்து விடைபெறுகின்றோம்!
ஊடகவியலாளர் மாநாட்டில் காரைதீவு சுயேச்சைக்குழுவின் தலைவர்!
(காரைதீவு நிருபர் சகா)

தேர்தலோடு எமது இரண்டுமாத கால அரசியல் செயற்பாட்டை நிறுத்திக்கொண்டோம்.
எனினும் கடந்த 10ஆம் திகதி வெளிவந்த பத்திரிகை அறிக்கையின்படி செய்த
சூழ்ச்சிகளை எல்லாம் செய்துவிட்டு அதனை மறைத்து எம்மையும் ஏமாற்றி
கபடநாடகம் ஆடிவிட்டு பழியை எம்மீது சுமத்தியதன் விளைவே இந்த
இம்மாநாட்டைக்கூட்டவைத்துள்ளது. என்ன நடந்தது என்பது பற்றி வாக்களித்த
மக்களுக்கும் தெரியப்படுத்தவேண்டியது எமது தார்மீக கடமை. அதற்காகவும்
இதனைக்கூட்டினோம்.

இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத் தேர்தலில் சுயேச்சை அணிக்கு தலைமைதாங்கி
வழிநடாத்திய சுயேச்சைக்குழுத்தலைவர் சந்திரசேகரம் நந்தகுமார் ஊடகவியலாளர்
மாநாட்டில் தெரிவித்தார்.

இம் மாநாடு காரைதீவிலுள்ள காரைதீவுப்பிரதேசபையின் சுயேச்சைக்குழு
உறுப்பினர் ஆறுமுகம் பூபாலரெத்தினம் இல்லத்தில் (25) மாலை
நடைபெற்றது.

அங்கு விளக்கமளித்த தலைவர் ச.நந்தகுமார் மேலும் கூறுகையில்:

காரைதீவின் சமகால நிலைமையைக்கருத்திற்கொண்டு அனைவரையும் ஒன்றுபடுமாறு
வேண்டினோம். அதனை த.தே.கூட்டமைப்பு குழப்பியதனால் சகல கட்சிகளும்
தேர்தலில் குதித்தன. நாம் விரும்பாத அரசியலில் குறிப்பாக தேர்தலில்
நாமும் குதிக்க மக்களால் நிர்ப்பந்திக்கப்பட்டோம். 2மாதங்களுள்
2000வாக்குகளை நம்பித்தந்த மக்களுக்கு நன்றிகள்.

தேர்தல் பெறுபேற்றின்படி 7தமிழ் உறுப்பினர்களும் 5முஸ்லிம்
உறுப்பினர்களும் தெரிவானார்கள். அந்த தருணத்தில் தமிழ்உறுப்பினர்கள்
7பேரும் சேர்ந்த தாராளமாக ஆட்சிமைக்கலாம் எனவே நாம் பகிரங்கமாக சகல
ஊடகங்கள் வாயிலாக த.தே.கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்கத்தயார் என்று
அறிக்கைவிடுத்தோம்.

தேர்தல்கால கசப்புணர்வுகள் எத்தனையோ இருந்தும் எமது காரைதீவு
தமிழ்மக்களுக்காக அந்த நேசக்கரத்தை தமிழர் என்பதால் நீட்டினோம். 2வாரமாய்
யாரும் பதிலளிக்கவில்லை.

அதன்பின்பு கனடாவிலிருந்துவந்த த.தே.கூட்டமைப்பு பிரமுகர் திரு.குகதாசன்
என்பவர் கட்சியோடு பேசவாருங்கள் என அழைத்தார். நாம் மறுநாள் மட்டக்களப்பு
சென்று த.அ.கட்சி செயலாளர் கி.துரைராஜசிங்கத்தோடு பேசினோம். அதில் எமக்கு
உப தவிசாளர் தருவதாகக்கூறினார்.

பின்னர் எந்தத்தொடர்பையும் அவர் வைக்கவில்லை.

27ஆம் திகதி செவ்வாயக்கிழமை சபையின் முதல்அமர்வு. ஆதலால் நானாக 25ஆம்
சனிக்கிழமை செயலாளருடன் தொடர்புகொண்டேன். அப்போது சொன்னார் நாம்
தனிக்கட்சியலல்ல பல கட்சிகள் சேர்ந்தது த.தே.கூட்டமைப்பு. நாம் பேசியபோது
அவர்கள் உங்களது உபதவிசாளர் கோரிக்கையை ஏற்கவில்லை.எனவே
அதனைத்தரமுடியாது. முடிந்தால் நிபந்தனையற்ற ஆதரவைத்தாருங்கள் என்று
பதிலளித்தார்.

அவ்விதம் நிபந்தனையற்ற ஆதரவைத்தரும் வண்ணம் உங்கள் கட்சிஆதரவாளர்கள்
தேர்தலில் நடந்துகொள்ளவில்லை. எனவே ஆதரவைத்தரமுடியாது. என்றேன்.
இதனை அவர் மறுப்பாராயின் பேச்சுவார்த்தையிலீடுபட்டபோது தொலைபேசி
கலந்துரையாடலில் ஈடுபட்ட ஆதாரங்கள் உள்ளன. அவர் அனுமதித்தால் வெளியிடவும்
தயங்கமாட்டோம்.

மறுநாள் த.தே.கூட்டமைப்பினர் மு.கா.வுடன் பேசி ஓர் உடன்பாடடிற்கு
வந்ததாகவும் உபதவிசாளர் பதவியை மு.காவிற்கு அதாவது இஸ்மாயிலுக்கு தருவதாக
அவர்கள் உடன்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

அதற்கு பல ஆதாரங்களுள்ளன.  அந்தக்கட்சியின் தவிசாளர் பதவிக்கு
போட்டியிட்ட ச.நேசராசா செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் மு.கா
வுடன்செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். அதுமட்டுமல்ல
சபை அமர்விற்கு வரமுன்பு இஸ்மாயில் உபதவிசாளர் என்ற பனர் அடித்து பட்டாசு
சுட்டுத்தான் வரவேற்பளிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டார்கள். ஆனால் நடந்ததோ
வேறு.

அவர்கள் முகாவோடு பேசி ஆட்சியமைக்கலாமென்றால் நீங்கள் ஏன் பேசக்கூடாதென
எமது ஆதரவாளர்கள் எமக்கு அழுத்தம் தந்தார்கள். நாம் மறுத்தோம்.
இருப்பினும் அன்றிரவு திடீரென நாம் சேர்ந்து பேசியபொது உடன்பிறந்த தமிழனை
மறந்து மு.காவுடன் பேசியுள்ளமை காரைதீவுக்கு இழைத்த துரோகம். எனவே நாம்
பேசுவோம் என்று அனைவரும்கூற முஸ்லிம்சகோதரர்களை அழைத்துப்பேசினோம்.
கொள்கையளவில் இணங்கினோம்.

அதற்குள்ளும் ஒரு உறுப்பினரை அவர்கள் வளைத்துப்போட எண்ணினார்கள். அது
பலனளிக்கவில்லை. சபை அமர்வு ஆரம்பமாக சில மணிநேரத்திற்கு முன்பு த.தே.கூட்டமைப்பின்
செயலாளர் துரைராஜசிங்கம் எம்.பிக்களான சிறிநேசன் கோடீஸ்வரன்
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்கள் எனது
வீட்டிற்கு வந்து எமது ஆதரவைக்கோரினர்.

காரைதீவு த.தே.கூட்டமைப்பிலிருந்து பறிபோகப்போகிறது என்ற காரணததினால்
இறுதிநேரத்தில் வந்து எம்மை ஏமாற்ற நாடகம்போடட்டார்கள்.

எனது வீட்டில் 8.45க்கு வந்து 11.20வரை பேசினார்கள். அதில் ஆக 15நிமிடமே
எம்முடன் பேசினார்கள். மீதி மணித்தியாலயங்கள் அவர்களுக்குள் உள்ள
குத்துவெட்டுக்கள் யார் தவிசாளர் என்பது பற்றிய சண்டைகளும்
முரண்பாடுகளும் தொடர்ந்தன.

யாரைத்தவிசாளராகத் தெரியலாம் என்று எம்முடனும் கேட்டார்கள். யார்
வந்தாலும் பரவாயில்லை என்று நாம்கூறிவிட்டு இந்தப்பெரியகட்சிக்கு தனது
உறுப்பினர்களுள் ஒருவரை தவிசாளராகத்தெரிவதில் இத்துணை இழுபறியா என்று
வினவினேன்.

அதுவரை நேசராசாதான் தவிசாளர் என்ற முடிவு அவரை அனுப்பிவிட்டு சிறில்தான்
தவிசாளர் என்று கூறிக்கலைந்தார்கள்.

இந்த சந்திப்பு தொடர்பான சிசிரிவி வீடியோ ஆவணங்கள் ஆதாரங்கள்
இன்னுமுள்ளன. பெரிய கட்சி என்பதால் கௌரவம் கருதி இங்கு காட்டவில்லை.
அவர்கள் இவற்றை மறுத்தால் பகிரங்கமாக போட்டுக்காட்டவும் தயங்கோம்.
ஆக மு.கா.வோடு தேனிலவு கொண்டாடிவிட்டு எங்களை ஏமாற்றி நாடகமாடிய
கும்பலின் கூழ்ச்சிதான் உபதவிசாளர் பதவி முஸ்லிம்மகனுக்கு சென்றதென்பதை
அவர்கள் ஒத்தக்கொண்டாகவேண்டும்.

காரைதீவில் தாராளமாக 7தமிழ் உறுப்பினர்களிருந்தும் 2மாதகாலம் இருந்தும்
இறுதிக்கணம்வரை இப்படி நாடகமாடவேண்டிய தேவை என்ன? மு.காவோடு
சேர்வதென்றால் சேர்வதுதானே. அது புதிதல்ல அவர்களுக்கு. அதற்காக
காரைதீவானை மடையனாக்க புறப்படவேண்டாம் என்பதே எமது கோரிக்கை.

இத்தோடு நாம் எமது அரசியலை முடித்துக்கொள்வோம். இன்னும் சீண்டினால்
மீண்டும் நாம் விழிக்கவேண்டிவரும். எனறார்.
மாநாட்டில் சுயேச்சை பிரமுகர்களான இரா.குணசிங்கம் வெ.ஜெயகோபன ஆகியோரும்
கருத்துரைத்தனர்.