அழிவடைந்த வயல்நிலங்களை ஆயர் நேரில் சென்று பார்வையிட்டார்

(டினேஸ்)

அண்மையில் உன்னிச்சைக் குளம் திறக்கப்பட்டதன் காரணமாக அழிவடைந்த வயல்நிலங்களைப் பார்வையிடுவதற்காக இன்றைய தினம் (10) மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை உள்ளிட்ட குழுவினர் சென்று பார்வையிட்டிருந்தனர்.

உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால் கடந்த 23ம் திகதி குளத்தின் வான்கதவுகளை ஒரே இரவில் 15 அடி திறந்ததன் மூலம் அதனை அண்டிய பகுதிகளில் 6000 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்திருந்தன. இச் செயற்பாட்டினைக் கண்டித்து விவசாயிகளால் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இவ்விடயம் தொடர்பில் பாதிப்படைந்த வயல்நிலங்களைப் பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அவ்விடம் விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயத்தில் ஆயித்தியலை விவசாய திட்டமுகாமைத்துவக் குழுத் தலைவர் க.யோகவேள் மற்றும் அருட்தந்தை நிக்ஷன் உட்பட விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் ஆயருக்கு தெளிவுபடுத்தியதுடன், அழிவுற்ற வயல்நிலங்களும் ஆயருக்கு காண்பிக்கப்பட்டது. இது தொடர்பில் உரியவர்களை தொடர்பு கொண்டு தன்னால் இயன்ற உதவிகளை மேற்கொள்வதாக ஆயர் இங்கு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.